Description
அம்மாக்கண்ணு யார்? நீலனை ஏன் அவளுக்குப் பிடிக்காது? அப்படி என்ன செய்துவிட்டான் அந்த நீலன்? எதற்காக அம்மாக்கண்ணுவையும் அவள் குடும்பத்தையும் பிரிட்டிஷ் அரசு சிறையில் தள்ளவேண்டும்? அந்தச் சின்னஞ்சிறு குழந்தையைத் தேடி எதற்காகச் சிறைக்கு வந்தார் காந்தி?
இந்திய சுதந்திரப் போராட்டம் பல்லாயிரம் பக்கங்களில் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டது உண்மைதான். ஆனால் அவற்றில் அம்மாக்கண்ணுவின் பெயர் நமக்கு உடனடியாகத் தட்டுப்படப்போவதில்லை. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நல்ல தமிழ் நூல்களைக் கண்டறிந்து அச்சேற்றிய வா.வெ.சாஸ்த்ருலுவும் மறக்கடிக்கப்பட்டவர்தான். வ.உ.சியையே யார் என்று கேட்பவர்கள் இருக்கும்போது, தென்னிந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கிய டாக்டர் தனகோடி ராஜுவை யாரேனும் அறிந்து வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா?
தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் மறைந்த போன பல பக்கங்களுக்கு இந்நூலில் உயிரூட்டியிருக்கிறார் நிவேதிதா லூயிஸ். நம் கவனத்தை ஈர்த்து, நம் சிந்தனைகளைக் கொள்ளை கொள்ளும் பல நிகழ்வுகளும் இதில் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசியல், சமூகம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் ஒரு சிறு புதையல்.