Description
கம்பனை முன்னமேயே கற்றவர்க்கு இது ஒரு ‘கையேடு’. இனி கற்பவர்க்கு இது ஒரு ‘கைவிளக்கு’.
***
கம்பன் கல்லாத கலையும் வேதக்கடலும் இல்லை எனலாம். கம்பன் கீர்த்தியை, கம்ப நாடனின் கவிதா நேர்த்தியை, அவனிடம் மலிந்து கிடக்கும் கலைமகள் கடாட்சத்தை, அவனது விருத்தமெல்லாம் இன்றளவும் மெருகு குலையாமல் தகத்தகாயமாய்த் துலங்குகின்ற விந்தையை, அவனது சமயப்பொறை ஓம்புகின்ற சிந்தையை – எடை போட்டு – அதன் நிறை என்னவென்று நமக்கு எடுத்தோதியுள்ளார் கம்ப காவலர் கம்பனடி சூடி திரு. பழ. பழநியப்பன்.
கம்பராமாயணத்தை சகலரும் அனுபவித்து ஜன்மம் கடைத்தேற வேண்டும், வீடுபேறு பெறவேண்டும், என்றெண்ணி இடையறாது முயன்று இந்த நூலை ஆக்கியளித்துள்ள திரு. பழ. பழநியப்பன் ‘இன்னோர் இராமானுச’ராய் என் கருத்துக்குப் புலப்படுகிறார்.
முக்கியமான பாடல்களை, ஆங்காங்கு முழுமையாய்ச் சுட்டியும், சில கடினமான சொற்களுக்கு அகராதிபோல் பொருள் விளக்கமும், பின்பு அப்பாடல்களின் பொருளை ரத்தினச் சுருக்கமாய் புரியும் தமிழில் நமக்குப் படைத்தும் தமிழ்ப் பணியும் தரணிப் பணியும் ஒருசேர ஆற்றியிருக்கிறார் கம்பனடிசூடி.
இந்த நூல் இருக்கும் இல்லந்தோறும் இன்பம் பெருகும்... பரிசுத்தமான இறையுணர்வில் இதயம் உருகும்!
- கவிஞர் வாலி