Description
எழுதப்பட்டு நூறாண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்ட பிறகும் இன்றும் முக்கியத்துவம் இழக்காமல், பல புதிய வெளிச்சங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு வண்ணமயமான ஆய்வு நூல் இது.
சமயப் பரப்புரைக்காக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த கிறிஸ்தவ குருமாரான நூலாசிரியர் ஹென்றி ஒயிட்ஹெட் சுமார் 40 ஆண்டுகாலம் தென்னிந்தியாவில் பல இடங்களில் பணியாற்றியிருக்கிறார். அப்போது வெவ்வேறு கிராமங்களில் மக்களிடையே நிலவிய பலவிதமான வழிபாட்டு முறைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. போகிற போக்கில் கண்டதையும் ஒரு சில தகவலாளிகள் சொன்னதைக் காதில் கேட்டு வாங்கியும் நூல்கள் எழுதிக்குவித்த மற்ற ஐரோப்பியர்கள் போலல்லாமல் ஒயிட்ஹெட் விரிவாகவும் ஆழமாகவும் கள ஆய்வுகள் மேற்கொண்டு உருவாக்கிய நூல் இது.
தெய்வங்களைப் பற்றிய நூல் மட்டுமல்ல இது. பலியிடும் முறைகள், சடங்குகள், திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள் என்று தமிழக மக்களின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்யும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் விரிகிறது. திராவிடவியலில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரும் இதனை வாசிப்பதும் விவாதிப்பதும் அவசியம்.