Description
எலான் மஸ்க் - கனவு நாயகன்
ஒரு பிரிவினருக்கு அவர் மீட்பர் என்றால் இன்னொரு பிரிவினருக்கு அவர் சாத்தான். மாபெரும் கனவுகளை விதைப்பவர் என்று ஒரு சாராரும் பொருளற்றுப் பிதற்றுபவர் என்று இன்னொரு சாராரும் அவரை மதிப்பிடுகின்றனர். இருவரும் ஒத்துப்போகும் புள்ளி ஒன்றுதான். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது எலான் மஸ்க்கின் நூற்றாண்டில். நம் வாழ்வையும் சிந்தனைகளையும் வேறெவரையும்விட அதிகம் பாதித்துக்கொண்டிருப்பவர் அவர்தான். சாகசங்களும் சர்ச்சைகளும் நிறைந்து தளும்பும் துடிதுடிப்பான வாழ்க்கை அவருடையது. மஸ்க் தொட்டதெல்லாம் மின்னுகிறது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ட்விட்டர் என்று தொடங்கி இவர் உள்ளங்கைக்குள் குவிந்திருக்கும் நிறுவனங்களின் சாதனைகள் திகைப்பூட்டுபவை. எப்போதும் மீடியா வெளிச்சத்தில் இருப்பதால் அவருடைய ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு நகர்வும் பல கோடிப் பேரால் கணந்தோறும் கண்காணிக்கப்படுகிறது. அவருடைய வெற்றிகளைவிட அவர் வளர்த்து வைத்திருக்கும் கனவுகள் முக்கியமானவை. ஒட்டுமொத்த மனித குலத்தையும் வேறொரு தளத்துக்கு உயர்த்திக் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் அவரிடம் உள்ளன. செவ்வாய் கிரகத்தை நாம் வெல்லப்போகிறோம், விரைவில் அங்கு குடியேறப்போகிறோம் என்று உறுதியாக நம்புகிறார் மஸ்க். எதிர்காலம் என்பது வேறொன்றுமில்லை, அது நான்தான் என்று அமைதியாக அறிவிக்கிறார். எலான் மஸ்க்கின் போராட்டங்கள், கனவுகள், பாய்ச்சல்கள், சறுக்கல்கள் அனைத்தையும் அட்டகாசமாக இந்நூலில் காட்சிப்படுத்துகிறார் நன்மாறன் திருநாவுக்கரசு.
ஸ்டீவ் ஜாப்ஸ்
சந்தேகமேயில்லாமல் இந்த நூற்றாண்டின் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகம் முழுக்க அவர் பெயர் இன்று அத்துப்படி. அவருடைய ஆப்பிள் தாயாரிப்புகள் பரவாத இடம் பூமியில் இல்லை.உலகப் புகழ்பெற்ற மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றைக் கட்டியெழுப்பியவராக மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் அசாதாரணமான ஒரு வெற்றியாளராகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் இன்று கொண்டாடப்படுகிறார். ஆப்பிள் என்னும் நிறுவனத்தின் பிறப்பும் வளர்ச்சியும் மட்டுமல்ல ஸ்டீவ் ஜாப்ஸின் பிறப்பும் வளர்ச்சியும்கூட திகைக்கவைக்கக் கூடியது. எந்தவொரு திரைப்படத்தையும் விஞ்சும் திருப்புமுனைகளைக் கொண்டது அவருடைய வாழ்க்கை. அதில் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் மட்டுமல்ல, சர்ச்சைகளும் சறுக்கல்களும்கூட கலந்திருக்கின்றன. வசதியான பின்னணியெல்லாம் இல்லை அவருக்கு. பெரும் படிப்பாளி என்றும் அவரை அழைக்க முடியாது.நூறு சதவிகிதம் ஒழுக்கமான, தூய்மையான மனிதர் என்றும் அவரைச் சொல்லி விட முடியாது. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸிடம் இளம் வயதிலேயே ஓர் பெரும் கனவு இருந்தது. அதைத் துரத்திச் செல்லும் துணிவும் இருந்தது.ஆப்பிள் என்னும் அதிசயம் சாத்தியமானதற்குக் காரணம் அதுதான். ஸ்டீவ் ஜாப்ஸின் பிரமிப்பூட்டும் வாழ்வையும் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக் கதையையும் ஒன்று சேர்த்து இந்தப் புத்தகத்தில் வழங்குகிறார் அப்பு. இப்படியொருவரால் நிஜமாகவே வாழ முடியுமா என்னும் திகைப்பையும் மயக்கத்தையும் இந்தப் புத்தகம் உங்களுக்கு ஏற்படுத்தப்போவது உறுதி