Description
நா முத்துக்குமார் கவிதைகள்
நா.முத்துக்குமார், ஆரம்பகாலங்களில் கவிதைத் தொகுப்புகள் மூலம் தன்னை நல்ல கவிஞனாக அடையாளப்படுத்தியவர்,
மிக மிக எதார்த்தமாக வாழ்வை நோக்கி, குடும்ப அங்கத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், காணுகின்ற சமுதாயக் காட்சிகள் ஆகியவற்றுடன் சிலிர்ப்பாயும் சிராய்ப்பாயும் பெற்ற அனுபவங்களைக் கவிதையாக்கியவர்.
அந்தரத்துப் படிகளில் ஆகாசக் கோட்டையேறி பிளாஸ்டிக் பூக்களால் தன்னைத் தானே அலங்கரித்து வியக்கும் அருவருக்கத்தக்க போக்கு அவரிடமில்லை. இதுவே ஆரோக்கியத்திற்கு ஓர் அடையாளம். எளிய சொற்கள், வலிந்து கொணரா மலேயே வருகின்ற ஓசையமைதி இவையே அவரது வலிமைக்கு அடையாளங்கள்.
ஒரு நல்ல படைப்பாளி, கரம்பற்றிக் குலுக்குகிறான். விரல்பற்றியும் அழைத்துச் செல்கிறான். அவலங்களில் உடன் அழுகிறான். ஆறுதலாய்க் கண்ணீர் துடைக்கிறான். போர்க்களங்களில் வாள் தருகிறான். வெற்றிக் கணங்களில் மாலை சூட்டுகிறான்.
பாதையோரங்களில் சிலையாகி படைப்பாளிகள் நிற்பதெல்லாம் பயணம் செல் வோர்க்கு என்றென்றும் வழிகாட்டி நிற்கும் வெற்றியால்தான்!
வாழ்த்துகளுடன், பாரதிபுத்திரன்
நா.முத்துக்குமார் கட்டுரைகள்
ஐந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயது வரை கிராமத்தில் என்னை வளர்த்தவர் அப்பாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வளர்த்துக்கொண்டிருப்பவர் அம்மாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருவர் பெயரும் கிருஷ்ணவேணி என்பது இயற்கையின் இனிய ஒற்றுமை. இவர்கள் இன்றி என் முகவரி சிதறிப் போயிருக்கும். நன்றி என்ற வார்த்தைக்குள் எப்படி இவர்களை அடைப்பது? சிறுவயதில் விளையாட்டில் ஏற்படும் காயங்களில் எல்லாச் சிறுவர்களும் அம்மா என்று குரலெடுத்து அழுவார்கள். அப்போதுகூட நான் ‘அப்பா’ என்றுதான் அழுதிருக்கிறேன். என் ஆளுமையில் பெரும்பங்கு வகிக்கும் தந்தை எ.நாகராசனுக்கும் என் அன்பு. காட்டுப்ரியத்துடன், நா.முத்துக்குமார்