Description
‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற இந்த நூலை மிகச்சரியாக காந்தியின் தென்னாப்ரிக்க அறப்போராட்டங்களிலிருந்து தொடங்குகிறார் அ.இராமசாமி. காந்திக்குத் தமிழ் அறிமுகமாவதும் தமிழர்கள் அணுக்கமாவதும் தென்னாப்ரிக்காவில்தான். தமிழ்நாட்டுக்கு காந்தி குறைந்தது 20 முறை வந்திருக்கிறார். காந்தியின் தமிழக சுற்றுப்பயண நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்யாமல் அன்றைய அரசியல் சூழ்நிலையையும் விடுதலைப் போராட்டத்தின் தீவிரத்தையும் ஒரு வரலாற்றாசிரியரின் மதிநுட்பத்துடன் விளக்கமாக எழுதியிருக்கிறார் அ.இரா. தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, வருணாச்சிரமம், சாதிப் பிரிவினை, மத மாற்றம், தாய்மொழி, கல்விமுறை உள்ளிட்ட பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கு காந்தியார் அளித்த அறிவார்ந்த கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. காந்தியின் பல தீர்வுகளும் இன்றைக்கும் செயல்முறைக்கு உகந்தவை. தமிழ்நாடுதான் காந்தியின் அரசியலுக்கு வேர். மதுரையில் அரையாடைக்கு மாறுகிறார் அண்ணல். ஒத்துழையாமை இயக்கம் என்ற கனவு காந்திக்கு உதித்தது சென்னையில்தான். தமிழகம் மகாத்மாவின் மனம் கவர்ந்த இடம் மட்டுமல்ல, அவர் மன எழுச்சி பெற்ற இடமும் கூட. சிந்தை, சொல், செயல் மூன்றிலும் அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த அண்ணல் காந்தி தம்மிடம் ஆட்பட்டவரின் உள்ளம் புகுந்து அவரை இயக்கும் சக்தியானார். காந்தி ஒரு மனிதர் இல்லை; ஓர் இயக்கம். தமிழ்நாட்டில் காந்தி தமிழகம் கண்ட மகாத்மாவின் வரலாறு; சொல் உராய்ந்து எழும் தீ எழுதிய வரலாறு.